புத்ரஜெயா, ஆக. 5 - துஷ்பிரயோகம் செய்யப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாக உணவு விற்பனை வளாகங்கள், குறிப்பாக சிற்றுண்டிச்சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் மானிய விலை திரவமய பெட்ரோலிய எரிவாயுவை (எல்.பி.ஜி.) தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அமலாக்க நடவடிக்கையில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
முறைகேடுகள் தொடர்பான பிரச்சினையை தமது அமைச்சு தீவிரமாகக் கருதுவதாகவும் அரசாங்க மானியங்கள் பொறுப்பற்ற தரப்பினரால் தவறாகப் பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக சமையல் எரிவாயு நடவடிக்கை (ஓப்ஸ் காசாக்) மூலம் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படுவதாகவும் துணை அமைச்சர் டத்தோ டாக்டர் புஸியா சாலே கூறினார்.
எல்.பி.ஜி. மொத்த விற்பனையாளர்கள் போர்வையில் ஒளிந்திருக்கும் சில தரப்பினர் தொழில்துறையினருக்கு மானிய விலை எரிவாயுவை விநியோகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிற்றுண்டிச்சாலைகள் மீது ஓப்ஸ் காசாக் கவனம் செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மானிய விலையில் கிடைக்கும் எல்.பி.ஜி. சிலிண்டர்களை எடுத்து பின்னர் அவற்றை மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர்களாக கும்பல் மாற்றுவதை நாங்கள் கண்டறிந்தோம். மானிய விலையில் கிடைக்கும் 14 கிலோ எல்பிஜி சிலிண்டருக்கு வெ.26.60 செலவாகும். அதே சமயம் மானியம் இல்லாத 14 கிலோ சிலிண்டரின் விலை 70 வெள்ளி ஆகும் என்றார் அவர்.
மானிய விலையில் கிடைக்கும் எரிவாயு மானியம் இல்லாத சிலிண்டர்களுக்கு மாற்றப்பட்டால் பெரும் லாபம் கிடைக்கும் என்பதை இந்த விலை வேறுபாடு காட்டுகிறது. அதிகாரிகள் தற்போது பெரிய அளவில் எதிர்த்துப் போராடும் மானியக் கசிவின் வடிவங்களில் இதுவும் ஒன்று என்று அவர் சமீபத்தில் பெர்னாமாவிற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறினார்.
மானிய விலை எரிவாயு மோசடி- உணவு வளாகங்களில் அமைச்சு சோதனை
5 ஆகஸ்ட் 2025, 8:11 AM