கோலாலம்பூர், ஜூலை 5 - தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் பொது எல்லை செயல்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும்.
இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் கலந்து கொள்ளும் இந்த பேச்சுவார்த்தையில் குறைந்த பட்சம் போரை நிறுத்துவதற்கு அல்லது போர் நிறுத்தத்தைத் தொடர்வதற்கு இணக்கம் காணப்படும்.
மேலும், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் அத்துமீறல் நிகழாதிருப்பதும் உறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியா ஒருங்கிணைத்துள்ள சில முக்கிய அம்சங்கள் தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரம் இரு நாடுகளை பாதிப்பதோடு மட்டுமல்லாது ஆசியானின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த சர்ச்சைக்கு கருத்திணக்கமும் முழுமையான தீர்வும் கிட்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.
அனைத்து பிரச்சனைகளையும் கருத்திணக்கத்தின் அடிப்படையில் சுமூகமான முறையில் தீர்க்க முயன்று வருகிறோம். இவ்விவகாரத்திற்கு முழுமையான தீர்வினைக் காண்பதில் இரு நாடுகளும் இதுவரை காட்டி வரும் நேர்மறையான போக்கிற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று மக்களவையில் இன்று அமைச்சர்கள் கேள்வி நேரத்தின் போது பிரதமர் தெரவித்தார்.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுகளை நடத்துவதில் மலேசியாவின் பங்கு குறித்து பாத்தாங் சாடோங் தொகுதி ஜி.பி.எஸ். உறுப்பினர் ரோடியா சாப்ளி எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.


