கோலாலம்பூர், ஆக. 4- தலைநகர், ஸ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள ஒரு வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் ஆடவர் ஒருவரை கைது செய்த போலீசார், 439.7 கிலோகிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் கெட்டமைன் போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
ஒரு மாத கால உளவு நடவடிக்கைக்கு பிறகு பிற்பகல் 2.10 மணிக்கு நடத்தப்பட்ட இந்த சோதனை, இந்த ஆண்டின் மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசைன் ஓமார் கான் கூறினார்.
30 வயதான உள்ளூர் நபர் வாடகைக்கு எடுத்திருந்த அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 234 கிலோ ஷாபு அடங்கிய 224 பொட்டலங்களும் 205.7 கிலோ கெட்டமைன் கொண்ட 200 பிளாஸ்டிக் பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 1 கோடியே 77 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
போதைப்பொருள் கும்பலின் ஒருங்கிணைப்பாளராக மற்றும் 'டிரான்ஸ்போர்ட்டராக' (போக்குவரத்து முகவராக) செயல்பட்டு வந்த சந்தேக நபர் மாதத்திற்கு 6,500 முதல் 7,000 வெள்ளி வரை சம்பளம் பெற்று வந்ததாக அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
உள்ளூர் சந்தையில் விநியோகம் செய்வதற்கு முன்பு போதைப் பொருளை சேமித்து வைக்கும் கிடங்காக அக்கும்பல் இவ்வீட்டை பயன்படுத்தி வந்ததாக ஹூசேன் தெரிவித்தார்.
அனைத்து போதைப்பொருட்களும் அண்டை நாட்டிலிருந்து சம்பந்தப்பட்ட கும்பலால் தரைவழியாக கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. கோரிக்கை இருக்கும் பட்சத்தில் போதைப்பொருட்களை அனுப்புமாறு அந்த நபருக்கு யாரோ ஒருவரிடமிருந்து உத்தரவு கிடைத்ததாக நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
இச்சோதனையில் இரண்டு கார்கள், மூன்று கைக்கடிகாரங்கள் மற்றும் 93,350 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 17.9 மில்லியன் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கைதான ஆடவர் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காகக் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


