கோலாலம்பூர், ஜூலை 4- அந்நிய நாட்டினர் சட்டவிரோதமான முறையில் நுழைய அனுமதிக்கும் ‘கவுண்டர் செட்டிங்‘ நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்திற்காக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ.) பணி புரிந்து வந்த 26 அமலாக்க உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கடந்தாண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு இதே குற்றத்திற்காக எண்மர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு ஆணையம் (ஏம்.ஏ.சி.சி.) 50 ‘ஆவி சுற்றுப்பயணிகளை‘ அடையாளம் கண்டதாக கூறிய அவர், அவர்களில் இருவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையில் எஞ்சியோருக்கு எதிரான நடவடிக்கைகள் எதிராக விசாரணை அறிக்கை தயாரிப்பு உள்பட பல்வேறு கட்டங்களில் உள்ளதாக சொன்னார்.
நான் சொன்ன யாவும் வெற்று வார்த்தைகள் கிடையாது. உண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டவையாகும். நாங்கள் ஊழலில் ஈடுபட்டவர்கள் யார் என்று பார்க்க மாட்டோம். ஒழுங்கீன செயலில் (ஊழல்) ஈடுபடுவோர் விஷயத்தில் அறவே விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப் படாது என்றார் அவர்.
ஆகவே, ஊழலை ஒழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து யாரும் வேள்வியெழுப்பத் தேவையில்லை என்று மக்களவையில் இன்று பெசுட் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ சே முகமது ஜூல்கிப்ளி ஜூசோ எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவத் குறிப்பிட்டார்.



