ஜோகூர் பாரு, ஆக. 4- புக்கிட் அமான் நிர்வாகத் துறையின் துணை மேலாண்மை இயக்குநர் (சேவைகள்/பணியாளர்கள்) சிபி அப்துல் ரஹ்மான் அர்ஷாட் ஜோகூர் மாநில காவல்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராக டத்தோ எம். குமார் (வயது 56) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ஜோகூர் கூலாய்யை பூர்வீகமாகக் கொண்ட 58 வயதான அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவி ஒப்படைப்பு ஏற்பு நிகழ்வு ஜொகூர் போலீஸ் தலைமையகத்தில்
அரச மலேசிய போலீஸ் படையின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் அஜிஸ் அப்துல் மஜித், மாவட்ட காவல்துறைத் தலைவர்கள் மற்றும் ஜொகூர் மாநில போலீஸ் தலைமையக உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், அப்துல் ரஹ்மானுக்கு சிபி (காவல்துறை ஆணையர்) பதவியை அப்துல் அஜீஸ் வழங்கினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அப்துல் அஜீஸ், ஜோகூரில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவை செய்ததற்காக குமார் அவர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். அதே நேரத்தில் மாநிலத்தில் சிறப்பைத் தொடர்வதில் அப்துல் ரஹ்மானுக்கு உளள திறமை மீதும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜோகூர் காவல்துறைத் தலைவர் பதவிக்கு அப்துல் ரகுமான் சரியான வேட்பாளர் என்று நான் நம்புகிறேன். மேலும் புக்கிட் அமானில் உள்ள எங்களுக்கு அவரது திறமை மீது அதிக நம்பிக்கை உள்ளது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கடந்த 1991ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி
போலீஸ் படையில் சேர்ந்து ஜோகூர் காவல்துறைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்த குமார், தனது பதவியை ஏற்றுள்ள அப்துல் ரஹ்மானின் திறமை மீது நம்பிக்கை தெரிவித்தார்.
ஜொகூரில் எனது சேவைக் காலம் முழுவதும் எனக்கு அளித்த வலுவான ஆதரவிற்காக ஜோகூர் காவல்துறை உறுப்பினர்கள், மாநில அரசுத் தலைமை, அமலாக்க நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநராக டத்தோ குமார் நியமனம்
4 ஆகஸ்ட் 2025, 8:23 AM



