சுபாங் ஜெயா, ஆக. 2- நாடு முழுவதும் பத்து லட்சம் மலிவு விலை வீடுகளைக் நிர்மாணிக்கும் மத்திய அரசின் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் 200,000 மலிவு விலை வீடுகளைக் கட்ட சிலாங்கூர் அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
சிலாங்கூரில் இதுவரை 76,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளையில் மக்கள் மலிவு விலையில் வசதியான வீடுகளை சொந்தமாக்கிக் கொள்வதற்குறிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்று வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ பொர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்
வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் பத்து லட்சம் மலிவு விலை வீடுகளைக் கட்டுவது தொடர்பில் சமீபத்திய 13வது மலேசியா திட்டத்தில் பிரதமர் வெளியிட்ட பரிந்துரையை நிறைவேற்ற நாங்கள் உதவுகிறோம்.
சிலாங்கூரில் இப்போது நாங்கள் 76,000 க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டியுள்ளோம். இன்னும் மூன்று ஆண்டுகளில் எஞ்சிய வீடுகளைக் கட்டும் இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.
முன்னதாக, இங்குள்ள ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூமா சிலாங்கூர்கூ ரெசிடென்ஸி ஜெயா திட்டத்தில் வீடு வாங்குபவர்களுக்கு அசல் பணத்தைத் திரும்ப வழங்கும் விழாவில் அவர் கலந்து கொண்டார்.
சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்துடைமை வாரியத்தின் (எல்.பி.எச்.எஸ்.) துணை நிர்வாக இயக்குநர் முகமட் ஹபீஸ் ஹாசன் மற்றும் ஸ்ரீ கெம்பங்கான் மாநில சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை 13வது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2026 முதல் 2035 வரையிலான 10 ஆண்டுகளுக்குள் பத்து லட்சம் மலிவு விலை வீடுகளைக் கட்டும் இலக்கை அறிவித்தார்.
2028ஆம் ஆண்டிற்குள் 200,000 கட்டுபடி விலை வீடுகளை கட்ட சிலாங்கூர் இலக்கு
2 ஆகஸ்ட் 2025, 11:54 AM


