ஜோகூர் பாரு, ஆக. 2 - ஜோகூர், உலு திராமில் உள்ள இராணுவப் போர் பயிற்சி மையத்தில் (புலாடா) பயிற்சியின் போது இறந்த மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (யு.டி.எம்.) ரிசர்வ் அதிகாரி பயிற்சி மாணவரின் மரணம் குறித்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சு தவிர்த்து கூடுதலாக, உயர்கல்வி அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இறந்த மாணவர் மீது பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் முடிவுகள் கிடைக்கவில்லை. இருப்பினும், மலேசிய ஆயுதப்படை நிலையில் அம்மாணவரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை விசாரிக்க ஏற்கனவே ஒரு குழுவை நாங்கள் அமைத்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள தாமான் மாவார், டேவான் முவாபாக்காட்டில் நடைபெற்ற பாசீர் கூடாங் அம்னோ பிரிவு பேராளர் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, தனது மகன் ஷியாம்சுல் ஹாரிஸ் சம்சுடினின் உடலில் கடுமையான சிராய்ப்புக் காயங்களைக் கண்டதாக அம்மாணவரின் தாயார் உம்மு ஹைமான் டவுலாட்கான் (வயது 45) காவல்துறையில் புகார் அளித்ததாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த 22 வயது பயிற்சி அதிகாரியின் மரணத்தில் எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்பதை கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் யூசோப் ஓத்மான் நேற்று உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து கடந்த ஜூலை 28 ஆம் தேதி மாலை 5.33 மணிக்கு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதே நாள் பிற்பகல் 2.30 மணியளவில் புலாடாவில் போர் தடுப்பூசி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாதிக்கப்பட்ட மாணவர் தொடர்பின்றி ஏதேதோ வார்த்தைகளை பேசியதோடு கட்டுப்பாட்டை இழந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
பின்னர் அவர் உடனடியாக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
யு.டி.எம். பயிற்சி மாணவர் மரணம்- சிறப்பு விசாரணைக் குழுவை அமைச்சு அமைத்தது
2 ஆகஸ்ட் 2025, 12:13 PM


