புத்ராஜெயா, ஆக. 2- அமலாக்கத்தில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படும் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் அணுக்கமாக கண்காணிக்கப்படும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.
நிதியமைச்சு மற்றும் பொருளதார அமைச்சினால் கூட்டாக மேற்கொள்ளப்படும் இந்த கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பான அறிக்கை ஆண்டிற்கு இரு முறை வெளியிடப் படும் என்று அவர் சொன்னார்.
13வது மலேசியத் திட்டம் 2030 வரை அமல்படுத்தப்படும் நீண்டகாலத் திட்டமாகும். ஆகவே, அத்திட்டம் திட்டமிட்டப்படி அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதை நாங்கள் முழுமையாக உறுதி செய்வோம் என்றார் அவர்.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் உடனடியாக தொடங்கப்பட வேண்டும். அமலாக்கத்தில் ஏற்படும் தாமதம் பொது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் இன்று இங்கு ஓட்டப்பந்தய நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பதின்மூன்றாவது மலேசியத் திட்ட அமலாக்க பகுதிகளுக்கு தாம் நேரில் சென்று நிலைமையை கண்டறியும் அதே வேளையில் திடீர் வருகை மேற்கொண்டு சோதனையையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நமது நோக்கம் மக்களுக்கு சேவை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும். ஆகவே, திட்டங்களை உடனடியாகவும் நிர்வாக நடைமுறை இடையூறுகள் இன்றியும் மேற்கொள்வது அவசியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வரும் 2026 முதல் 2030 வரை ஐந்தாண்டுகளுக்கு மக்கள் நலனை பிரதான நோக்கமாக கொண்ட உள்கட்டமைப்பு, வெள்ளத் தடுப்பு, சாலை வசதி உள்ளிட்ட முன்னெடுப்புகளை உள்டக்கிய 13வது மலேசியத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சில தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்தார்.




