கோலாலம்பூர், ஆக. 2- அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை ரஷ்யாவிற்கு அரசுமுறைப் பயணம் கொள்கிறார்.
கடந்த 1967 ஆம் ஆண்டு அரசதந்திர உறவுகள் ஏற்படுத்தப் பட்டப் பின்னர் ரஷ்யாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் முதல் மலேசியத் தலைவராக பேரரசர் வரலாறு படைக்கிறார் என்று இஸ்தானா நெகாரா இன்று தெரிவித்தது.
நாட்டின் அரச தந்திரத்தின் உந்துசக்தியாக விளக்குவதில் மலேசிய அரச அமைப்பின் முக்கிய பங்கையும் இந்த வருகை குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வர்த்தகம், உயர்கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் மக்களிடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று மாநில அரண்மனை தெரிவித்தது.
கடந்த 1996 முதல் ஆசியான் கலந்துரையாடல் பங்காளியாக ரஷ்யா இருக்கும் சூழலில் 2025 ஆசியான் தலைவராக விளங்கும் மலேசியாவுடன் விவேக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த பயணம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
மாஸ்கோவில் தங்கியிருக்கும்போது கிரெம்ளினில் நடைபெறும் அரசு வரவேற்பு விழாவில் சுல்தான் இப்ராஹிமை புடின் வரவேற்பார் என்றும் அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெறும் என்றும் அரண்மனை அறிவித்தது.
பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம்
2 ஆகஸ்ட் 2025, 5:14 AM