ஷா ஆலம், ஆகஸ்டு 2 - சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடத்தில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளின் (சுக்மா) தொடக்க விழாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அம்சங்கள் இடம்பெறும்.
இந்த தொழில்நுட்பம் நன்மைகளையும் தீமைகளையும் கொண்டுள்ள போதிலும் அதன் பயன்பாட்டை தவிர்க்க இயலாது என்று சுக்மா XXII சிலாங்கூர் 2026 செயலக தலைமை நடவடிக்கை அதிகாரி ஆர். வேணு கூறினார்.
நாங்கள் பயன்படுத்த முயற்சிக்கும் முதலாவது அம்சம் செலவினக் குறைப்பாகும். இத்திட்டம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வது இரண்டாவது அம்சமாகும் என அவர் சொன்னார்.
எங்கள் திட்டமிடலைப் பொறுத்தவரை தொடக்க விழாவிற்கு ஏ ஐ. அம்சங்கள் பயன்படுத்தப்படலாம் என்று சிலாங்கூர் எப்.எம்.மிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது அவர் கூறினார்.
வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி செக்சன் 7, டேவான் ராஜா முடா மூசாவில் நடைபெறும் சுக்மா சின்னம் மற்றும் கருப்பொருள் வெளியீட்டு விழாவின் போது சுக்மா போட்டிக்கான கவுண்டவுன் எனப்படும் இறங்குமுக கணிப்பை தொடங்க ஏ ஐ. பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சுக்மா போட்டிக்கான எதிர்பார்ப்பு உணர்வை மக்களிடையே தூண்டுவதற்கு 'கவுண்டவுன்' ஒரு ஏ.ஐ. அம்சமாக விளங்குகிறது என்று வேணு கூறினார்.
அனைத்து மாவட்டங்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக மிகவும் நெறிப்படுத்தப்பட்ட நிகழ்விற்கு தளவாட அம்சங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுக்மா சிலாங்கூர் போட்டி அடுத்தாண்டு ஆகஸ்டு 15 முதல் 24 வரை நடைபெறும் வேளையில் பாரா சுக்மா போட்டி செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை 22ஆம் தேதி கூறியிருந்தார்
சுக்மா சிலாங்கூர் தொடக்க விழாவில் ஏ.ஐ. அம்சங்கள் இடம்பெறும்- தலைமை அதிகாரி வேணு தகவல்
2 ஆகஸ்ட் 2025, 3:11 AM