டோக்கியோ, ஜூலை 31- ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு
நேற்று ஜப்பானின் பசிபிக் கடற்கரையை ஒரு மீட்டருக்கும் அதிகமான உயர அலைகள் தாக்கியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்தது.
வடகிழக்கு ஜப்பானின் இவாட் மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் 1.3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் பதிவானதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் கூறின.
அதே நேரத்தில் பல பகுதிகளில் 80 சென்டிமீட்டர் உயர அலைகளும் காணப்பட்டன. கடந்த
செவ்வாய்க்கிழமை கம்சட்கா தீபகற்பத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 136 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானிய அதிகாரிகள் மூன்று மீட்டர் உயரம் வரையிலான சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தனர் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 8.0 ஆக பதிவாகியதாக அம்மையம் முன்னதாக அறிவித்தது. வழக்கமாக சுனாமிக்கு முன்னதாக பல சிறிய அளவிலான வெள்ள அலைகள் ஏற்படும்.
உயரமான நிலங்கள் அல்லது கட்டிடங்களுக்கு வெளியேற்றுமாறும் கோடை வெப்பத்தை பொருட்படுத்தாமல் தற்போதைக்கு அங்கேயே இருக்குமாறும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியது.
கியோட்டோவின் வடக்கே உள்ள ஹியோகோ மாநிலத்தில் உள்ள டம்பாவில் கடந்த புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியஸை எட்டியதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
சுனாமி எச்சரிக்கை ஒரு நாள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் கூறியது.
இதுவரை உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்பதோடு அணுமின் நிலையத்தில் எந்த அசாதாரண சூழலும் கண்டறியப்படவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு உலகளவில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கம் இதுவாகும்.