கோலாலம்பூர், ஜூலை 30 - இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, ஜூலாவ் நாடாளுமன்றத் தொகுதியில் குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில், 4ஜி அணுகல் விகிதம், 58.28 விழுக்காட்டை எட்டியுள்ளது.
அதோடு, அந்த நாடாளுமன்றத் தொகுதியில் 5G அலைபரப்பி உள்கட்டமைப்பு குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் நடவடிக்கை மக்கள் தொகை அதிகமான மற்றும் தொழில்துறை பகுதிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. அது தற்போது அமலாக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
இருப்பினும், ஜூலாவ் பகுதி உட்பட கிராமப்புறங்களுக்கு 5ஜி அணுகலை விரிவுபடுத்துவது, உள்கட்டமைப்பின் தேவைகள் மற்றும் தயார்நிலையின் அடிப்படையில் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும்", என்றார் அவர்.'
மக்களவையில், ஜூலாவ் நாடாளுமன்றத் தொகுதியில் 4G மற்றும் 5G இணைய அணுகல் விரிவுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து, அந்நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ லாரி சாங் எழுப்பிய கேள்விக்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இவ்வாண்டு ஜூன் 30-ஆம் தேதி வரையில், JENDELA திட்டத்தின் கீழ், ஜூலாவ் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 48 புதிய தொடர்பு கோபுரங்களில், 43 கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, செயல்படத் தொடங்கியுள்ளன என்றார்.
பெர்னாமா


