மாஸ்கோ, ஜூலை 30 - ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் காரணமாக நான்கு மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்தன. இதனால் ஹவாய் மற்றும் பசிபிக் பெருங்கடல் முழுவதும் மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொலைதூர ரஷ்ய பிராந்தியத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தில்
கட்டிடங்கள் சேதமடைந்ததோடு பலரும் காயமடைந்தனர். அதே நேரத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு உண்டான 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவிற்குள்ளான ஜப்பானின் கிழக்கு கடற்கரையின் பெரும்பகுதியை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.
ஹவாயில் கடலோரத்தில் குடியிருப்போர் உயரமான பகுதிக்கு அல்லது நான்கு அல்லது அதற்கு மேல் உள்ள மாடி கட்டிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் சுனாமி நெருங்கி வருவதால் துறைமுகங்களில் இருந்து கப்பல்களை வெளியேறுமாறு அமெரிக்க கடலோர காவல்படை உத்தரவிட்டது.
முதலில் சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெரும்பாலான ஹவாய் தீவுகளில் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு வரை பெரிய அலைகள் எதுவும் காணப்படவில்லை என்பதை நேரடி ஒளிபரப்புகள் காட்டின.
முன்னதாக கம்சட்காவின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. துறைமுகம் மற்றும் செவெரோ-குரில்ஸ்க் நகரில் உள்ள ஒரு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை வெள்ளத்தில் ஓரளவு பாதிக்கப்பட்டதாகவும் கப்பல்கள் அவற்றின் நங்கூரங்களில் இருந்து அகன்று சென்றதாகவும் பிராந்திய அதிகாரிகள் மற்றும் ரஷ்யாவின் அவசர சேவைகள் அமைச்சு தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் மிகவும் கடுமையானதாகவும் கடந்த பல ஆண்டுகளில் நிகழ்ந்ததைவிட மிகவும் வலிமையானதாகவும் இருந்தது என்று கம்சட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்ட வீடியோவில் தெரிவித்தார்
கடந்த 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதியில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


