(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 30- சுபாங் ஜெயா தொகுதி இந்திய சமூகத் தலைவர்
(கே.கே.ஐ.) நவமணி நாகப்பன் ஏற்பாட்டில் இலவச டியூஷன் வகுப்பு சுபாங்
ஜெயா, பிஜேஎஸ் 7 அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடத்தப்படுகிறது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மற்றும் மித்ரா என்ரிச்மேண்ட்
அமைப்பின் (எம்.இ.ஒ.) ஆதரவுடன் நடத்தப்படும் இந்த டியூஷன் வகுப்புத்
திட்டத்திற்கு பவுலின் மற்றும் பரணி ஆகியோர் முழு ஒத்துழைப்பு நல்கி
வருகின்றனர்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00
மணி வரை நடைபெறும் இந்த டியூஷன் வகுப்பில் ஒன்று முதல் ஆறாம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மலாய், ஆங்கிலம் மற்றும்
கணிதம் ஆகிய பாடங்கள் போதிக்கப்படுவதாக நவமணி தெரிவித்தார்.
இந்த டியூஷன் வகுப்பினை நடத்துவதற்கு உண்டாகும் செலவினை
கே.கே.ஐ. சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி மற்றும் எம்.இ.ஒ. அமைப்பு
ஆகிய தரப்பினர் ஏற்றுக் கொள்வதாக சட்டமன்ற உறுப்பினரின்
உதவியாளருமான அவர் குறிப்பிட்டார்.
இது தவிர, மாணவர்கள் மத்தியில் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில்
கலை மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சி, சண்ட்விச் போன்ற
உணவு தயாரிப்பு முறை, விளையாட்டு மற்றும் தன்முனைப்பு பயிற்சி
உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் மாதம் ஒரு முறை ஏற்பாடு செய்யப்படுகிறது
என அவர் கூறினார்.
கடந்தாண்டு தேசிய தினத்தின் போது இளம் பிராயத்தினர் மத்தியில்
நாட்டுப் பற்றை விதைக்கும் நோக்கில் தேசிய கொடிக்கு வர்ணம் தீட்டும்
போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தோம் என்றார் அவர்.
சுபாங் ஜெயா தொகுதியில் உள்ள குறைந்த வருமானம் பெறும் இந்திய
குடும்பங்களின் நலனில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங்
மிகுந்த அக்கறை காட்டி வருவதாக கூறிய அவர், இந்திய சமூகத்
தலைவர் என்ற முறையில் தாம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாரா ய்டு முழு ஆதரவை வழங்கி வருவதாக
குறிப்பிட்டார்.


