நோம் பென், ஜூலை 30 - தாய்லாந்துடனான எல்லை மோதலைத் தீர்ப்பதில் தனது உறுதியான நிலைபாட்டை வெளிப்படுத்திய கம்போடியா, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே கடந்த திங்களன்று புத்ராஜெயாவில் ஒரு சிறப்பு சந்திப்பை ஏற்படுத்தியதற்காக மலேசியாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மலேசிய ஆயுதப் படைகளின் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முகமட் நிஜாம் ஜாஃபர் தலைமையில் ஒரு குழுவை மலேசியா நேற்று கம்போடியாவிற்கு அனுப்பியது.
தற்போதைய ஆசியான் தலைவர் என்ற முறையில் தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு ஆயுதப்படைத் தளபதி தலைமையிலான குழுவை அனுப்பிய விரைவான நடவடிக்கைக்காக மலேசியாவிற்கு கம்போடியா தனது பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துதல், சரிபார்த்தல் மற்றும் அறிக்கையிடுவதற்கான விரிவான வழிமுறைகளை உருவாக்குவது குறித்து விவாதிப்பதற்காக இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது என்று கம்போடியாவின் வெளியுறவு மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த ஜூலை 24 முதல் ஆயுத மோதலால் பாதிக்கப்பட்டுள்ள கம்போடியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதையும் இயல்புநிலை மீட்டெடுப்பதையும் ஒருங்கிணைக்க மலேசிய அதிகாரிகள் நோம் பென்னில் உள்ளனர்.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூட்டிய சிறப்புக் கூட்டத்தின் பயனாக கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த கம்போடியாவும் தாய்லாந்தும் ஒப்புக்கொண்டன. இந்தக் கூட்டத்தின் இணை ஏற்பாட்டாளராக அமெரிக்கா உள்ளது, அதே நேரத்தில் சீனா ஒரு பார்வையாளராகச் செயல்படுகிறது.


