ஷா ஆலம், ஜூலை 30 - முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமையிலான சிலாங்கூர் மாநில பேராளர் குழு இந்தியாவுக்கு வர்த்தக பணி நிமித்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக அக்குழு டெல்லி இந்திய தொழில்நுட்ப கல்லூரிக்கு (ஐ.ஐ டி.) வருகை மேற்கொண்டதாக இங் ஸீ ஹான் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
உலகளாவிய செமிகண்டக்டர் சூழலியல் அமைப்பில் சிலாங்கூரின் பங்கை வலுப்படுத்த நீண்டகால கல்வி மற்றும் புதுமை பங்காளித்துவங்களை நாங்கள் ஆராயவிருக்கிறோம் என அவரா தெரிவித்தார்.
துறைகள் மற்றும் மாணவர் பரிமாற்ற முயற்சிகளில் சாத்தியமான ஒத்துழைப்புகளோடு தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட நுண்நற்சான்றிதழ் திட்டங்கள், குறிப்பாக சிப் எனப்படும் நுண்சில்லு வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பொறியியல் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
கல்விக்கு அப்பால், இந்த வருகை சிலாங்கூரின் புதுமை சூழியல் அமைப்புடன் துடிப்புமிக்க தொடக்க சமூகத்தை டில்லி ஐ.ஐ.டி.யுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
விரிவான எதிர்கால தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவோர் பரிமாற்றத்திற்கான அடித்தளத்தை இது ஏற்படுத்துகிறது. இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் நிபுணத்துவம் மற்றும் திறமையை இணைப்பதன் மூலம் நாங்கள் ஒரு சிறந்த, இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்கு முதலீடு செய்கிறோம் என அவர் மேலும் சொன்னார்.


