ஷா ஆலம், ஜூலை 30 - தலைநகரில் உள்ள அரச மலேசிய போலீஸ் (பி.டி.ஆர்.எம்.) கல்லூரியின் கட்டளை அதிகாரி டத்தோ ஷாசெலி கஹார் சிலாங்கூர் காவல்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட டத்தோ ஹூசேன் ஓமார் கானுக்குப் பதிலாக ஷாசெலி இப்பொறுப்பை ஏற்கிறார். இந்த பதவியை முன்பு சிலாங்கூர் துணை போலீஸ் தலைவர் முகமது ஜைனி அபு ஹாசன் வகித்து வந்தார்.
ஷாசெலியின் பதக்க அணிவிப்பு மற்றும் பதவி நியமன நிகழ்வு இங்குள்ள சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்றது, புக்கிட் அமான் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநர் கில்பர்ட் பிலிப் லாயாங் தலைமை தாங்கினார்.
இந்த நியமனம் தன் மீது வைக்கப்பட்டுள்ள பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என பதவியேற்பு நிகழ்வின் போது ஆற்றிய உரையில் ஷாசெலி கூறினார்.
போலீஸ் படை நிர்வாகத்தின் சிறப்பைத் தொடர்வதிலும் சிலாங்கூரில் அமைதி மற்றும் ஒழுங்கை உறுதி செய்வதிலும் தனக்கு உள்ள உறுதிப்பாட்டை அவர் தமதுரையில் வெளிப்படுத்தினார்.
உயர்நெறியும் நம்பகத்தன்மையும் கொண்ட தலைமைத்துவத்திற்கான சமூகம் மற்றும் போலீஸ் படை உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை புதிய சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் என்ற முறையில் நான் அறிவேன்.
எனவே, சிலாங்கூரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் கட்டமைக்கப்பட்ட சிறந்த பாரம்பரியத்தைத் தொடரவும் மாற்றத்தை ஏற்படுத்தவும் நான் உறுதியாக இருக்கிறேன் என்று அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் போலீஸ் துறையில் பணியாற்றிய 50 வயதான ஷாசெலி, பேராக்கில் உள்ள ஈப்போ மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் புக்கிட் அமானில் பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டார்.


