NATIONAL

விலை மதிப்புள்ள பொருள்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அரசு தொடராது

30 ஜூலை 2025, 5:14 AM
விலை மதிப்புள்ள பொருள்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அரசு தொடராது

கோலாலம்பூர், ஜூலை 30 - விலை மதிப்புள்ள பொருள்  வரியை தொடர்ந்து செயல்படுத்துவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு  அறிவித்துள்ளது.

இருப்பினும், விலை மதிப்புமிக்க பொருள்கள்களுக்கான வரிக்  கொள்கை, விற்பனை வரி (எஸ்.எஸ்.டி.) மதிப்பாய்வில் உட்புகுத்தப்பட்டு ஆடம்பர மற்றும் விருப்பப் பொருட்களுக்கு ஐந்து சதவீதம் அல்லது 10 சதவீதம் என்ற விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. நேற்று நாடாளுமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சு குறிப்பிட்டது.

நிதி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதன் விளைவாக தேசிய வருமானத்தில் எதிர்பார்க்கப்படும்அதிகரிப்பு குறித்து, ஜெம்போல்  தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ ஷம்சுல்கஹார் முகமது  டெலி (பிஎன்-ஜெம்போல்) எழுப்பிய கேள்விக்கு  அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.

விலை மதிப்புமிக்க பொருள்களுக்கான வரியை  அறிமுகப்படுத்துவது தொடர்பான  பரிந்துரை கடந்த 2023ஆம் ஆண்டு செய்யப்பட்ட பட்ஜெட் மறு தாக்கலின்போது முன்வைக்கப்பட்டது.

கடந்த 2024 மே மாதம் தொடங்கி மதிப்புமிக்கப் பொருள்களுக்கு 5.0 முதல் 10 விழுக்காடு வரை  வரி விதிக்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. இந்த கூடுதல் வரியின் மூலம்  ஆண்டுதோறும் கூடுதலாக 70 கோடி வெள்ளியை ஈட்ட முடியும் என அரசாங்கம் எதிர்பார்த்தது.

இருப்பினும், பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இந்த வரி அமலாக்கம்

திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய தொடர்புடைய பங்களிப்பாளர்களுடன் கலந்தாலோசிக்க  அவகாசம் தேவை என்று அரசாங்கம் பின்னர் அறிவித்தது.

இதற்கிடையில், நாட்டின் வருவாயை  வலுப்படுத்த நேரடி வரிகள் மற்றும் மறைமுக வரிகளின் கீழ் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.

இவற்றில் 2024  மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மூலதன ஆதாய வரி  அமலாக்கமும் ஒன்றாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.