காஸா, ஜூலை 30 - மத்திய காஸா பகுதியில் உள்ள அல்-நுசைராத் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று அகதிகள் முகாமில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனை வட்டாரங்கள் கூறின.
மத்திய காசாவில் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மண்டலங்களில் ஒன்றான நுசைராட்டின் வடக்கே உள்ள "புதிய முகாம்" பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் அவர்கள் இறந்தனர்.
சக்திமிக்க வெடிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரின் உடல் பாகங்கள் சிதைந்தன என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்தது. இந்த தாக்குதல் அதிகாலையில் நடந்ததாகவும் பொதுமக்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
மருத்துவமனை தற்போது நோயாளிகளின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ள வேளையில் மருத்துவ குழுக்கள் அசாதாரண அழுத்தத்தின் கீழ் செயல்படுவதாக மருத்துவமனை தெரிவித்தது.
பல நோயாளிகள் கடுமையான காயங்களுக்கு ஆளானார்கள். ஆனால், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் இல்லாததால் போதுமான சிகிச்சை கிடைக்கவில்லை என்று அது கூறியது.
ஒரு வீட்டின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மீது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்ளே இருந்தபோது வீடு இடிந்து விழுந்தது என குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
அவசர சேவைகள் இல்லாததால் குடியிருப்பாளர்கள் இறந்தோரின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் கொண்டு செல்ல குதிரை வண்டிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது மிகவும் துயரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சியாக இருந்தது என பொதுமக்கள் கூறினர்.


