மாரான், ஜூலை 30 - இவ்வாண்டு ஜனவரி தொடங்கி தற்போது வரை நாடு
முழுவதும் பள்ளி வளாகங்களில் ஏற்பட்ட தீச்சம்பவங்கள் தொடர்பில் 76
புகார்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பதிவு
செய்துள்ளது.
அந்த தீ விபத்துகளில் 60 விழுக்காடு மின்சாரக் கோளாறு காரணமாக
ஏற்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது என்று அத்துறையின்
தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது கூறினார்.
வயரிங் எனப்படும் மின் கம்பி இணைப்பு முறை, மின்சார சாதன
பயன்பாடு மற்றும் மின் விநியோகத்தில் ஏற்பட்ட அழுத்தம் ஆகிய மூன்று
காரணங்கள் சுமார் 60 விழுக்காட்டு தீச்சம்பவங்களுக்கு காரணமாக
இருந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
தீ சம்பவங்கள் நடந்த இடங்களை வகுப்பறைகள், பரிசோதனைக்கூடம்,
பொருள் வைக்கும் கிடங்கு என நாங்கள் வகைப்படுத்தவில்லை. மாறாக,
பள்ளி வளாகம் என்ற பொதுவானப் பிரிவில் வைத்துள்ளோம் அவர்
தெரிவித்தார்.
இங்குள்ள கிழக்கு பிராந்திய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
பயிற்சி மையத்தில் 2025 தேசிய தீயணைப்பு பயிற்சித் திட்டத்தை முடித்து
வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே, சரவா மாநிலத்தில் நான்கு பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்
தீணை அணைப்பதற்காகக் கனரக வாகனங்களை தாங்கள் அங்கு
அனுப்பியுள்ளதாக நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
தீ விரைவாகப் பரவாமலிருப்பதை உறுதி செய்வதற்காக ‘தடுப்புக்
கோடுகளை‘ உருவாக்கும் நோக்கில் அந்த இயந்திரங்கள் அனுப்பப்பட்டதாக
அவர் சொன்னார்.
வெப்ப வானிலை நீடிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில்
ஏற்பட்டுள்ள தீ கரிமண் பகுதிக்கும் விரைந்து பரவும் அபாயம் இருப்பதே
தங்களின் தற்போதைய கவலையாகும் எனக் கூறிய அவர், விரிவான
தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு தாங்கள் தயாராகி வருவதாகச்
சொன்னார்.


