கோலாலம்பூர், ஜூலை 30 - ஆசிரியர் ஒருவரை குத்தியதோடு மிரட்டியதாக
சந்தேகிக்கப்படும் 14 வயது மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் காஜாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் நேற்று
முன்தினம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
உடற்கல்வி வகுப்பில் கலந்து கொள்ளாததற்காக 29 வயதுடைய ஆசிரியர்
கண்டித்ததால் அதிருப்தியடைந்த அந்த மாணவன் இவ்வாறு நடந்து
கொண்டதாகக் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோம்
அப்துல் யூசுப் கூறினார்.
ஆசிரியர் கண்டித்தப் பின்னர் அவருக்கும் அம்மாணவனுக்கும் இடையே
தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அம்மாணவன் ஆசிரியரின் முகத்தில்
குத்தியதோடு மிரட்டலையும் விடுத்தான்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் நேற்று முன்தினம் இரவு 7.15
மணியளவில் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அம்மாணவன்
காஜாங் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டான் என்று அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
இரு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அம்மாணவனுக்கு
எதிராக தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் இன்று காஜாங்
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று அவர்
குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியரை மாணவன் தாக்குவதை சித்தரிக்கும்
காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


