குவாந்தான், ஜூலை 30 - பகாங் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் கெத்தும் நீர் கடத்தல் நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்காக சுமார் 110,000 வெள்ளியை லஞ்சமாக கேட்டு பெற்ற சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற ஒருவர் உட்பட மூன்று உயர் காவல்துறை அதிகாரிகளை பகாங் ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) காவலில் வைத்துள்ளது.
எம்.ஏ.சி.சி. செய்து கொண்ட விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட தெமர்லோ நீதிமன்ற மாஜிஸ்திரேட் டான் சியூ கிங் அம்மூவரையும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை ஏழு நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
முப்பது முதல் 50 வயதுக்குட்பட்ட அந்த மூன்று நபர்களும் வாக்குமூலம் அளிப்பதற்காக தெமர்லோ எம்ஏசிசி கிளை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
தொடக்க கட்ட விசாரணையின் போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 2022 முதல் 2024 வரை இந்தச் ஊழல் செயலுக்கு உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கின் வாயிலாக மாதந்தோறும் சுமார் 4,000 முதல் 5,000 வரை லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது. பின்னர் அதை மற்ற சந்தேக நபர்களுடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு சந்தேக நபர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், பகாங் எம்.ஏ.சி.சி. இயக்குநர் முகமது சுக்கோர் மாமுட்டை தொடர்பு கொண்டபோது இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(a)(B) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.


