கோலாலம்பூர், ஜூலை 29 - வேகக் கட்டுப்பாட்டு சாதனம் (எஸ்.எல்.டி.) பொருத்தப்படாத வர்த்தக வாகனங்கள் சாலைகளில் அனுமதிக்கப்படாது.
எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த அமைப்பின் அமலாக்க கட்டம் தொடங்கியவுடன் அந்த சாதனங்கள் பொருத்தப்படாத வாகனங்கள் சோதனைகளில் தோல்வியடையும்.
கனரக வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில், குறிப்பாக பேருந்துகள் மற்றும் லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் அபாயத்தைக் குறைப்பதில் எஸ்.எல்.டி. செயலாக்கம் ஒரு முக்கியமான படியாகும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளிலும் சிங்கப்பூரிலும் இத்தகைய அமைப்பு முறை நீண்ட காலமாக கட்டாய அமலாக்கத்தில் இருந்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
சில தொழில்துறையினர் கூடுதல் செலவுகள் மற்றும் பலவற்றைக் காரணம் காட்டி இந்த சாதனத்தை பொருத்துவதிலிருந்து பின்வாங்கக்கூடும் என்பதை நான் அறிவேன். ஆனால் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் போது மனித உயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
சுமூகமான அமலாக்கத்தை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். செலவுகள் மற்றும் வணிக லாபங்களை விட பாதுகாப்பு முன்னுரிமை பெற வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதன் மூலம் எந்தவொரு எதிர்ப்பையும் எதிர்கொள்ள வேண்டும் என்று லோக் இன்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின் போது கூறினார்.
எஸ் எல்.டி. அமலாக்கத்தின் தாக்கம், அதன் செலவு மற்றும் பராமரிப்பு மற்றும் அமைப்பு தோல்வியின் தாக்கங்கள் குறித்தும் பிற நாடுகள் இந்த முறையை கட்டாயமாக்கிவிட்டதா என்பது குறித்தும் பெத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ரிச்சர்ட் ராபு எழுப்பிய துணை கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இந்த அக்டோபர் மாதம் தொடங்கி, எஸ்.எல்.டி. முறையின் அமலாக்கம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


