ஷா ஆலம், ஜூல 29 - தற்போது பூச்சோங் வட்டாரத்தில் கேக் செய்யும் வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வரும் திருமதி காயத்ரி அவர்களை மீடியா சிலாங்கூர் நேர்காணலில்
எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட உள்ளவர்களுக்கு பல வழிக்காட்டல்ளையும் நேர்காணலில் அவர் பகிந்து கொண்டார்.
தற்போது மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் தனது வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறுவதாகக் காயத்ரி தெரிவித்தார்.
சுமார் 10 வருடங்களுக்கு முன் இதுபோன்ற வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது வியாபாரத்தை மேம்படுத்துவதில் சற்று சிரமத்தை எதிர்நோக்கியதாகக் குறிபிட்டார்.
ஆனால், தற்போதையக் காலக்கட்டத்தில் அந்த பிரச்சனையை தீர்க்க சமூக ஊடகங்கள் நமக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷமாகும் என்றார்.
சமூக ஊடகங்களில் தீமைகள் பல இருந்தாலும் இதுபோன்ற நன்மைகளுக் இருக்கவே செய்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சமூக ஊடகங்கள் குறிப்பாக டிக்டோக் மூலம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் விவரித்தார். அதில் மூவினமும் அடங்கும் என்றார்.
மேலும், தனது வியாபாரத்தை விரிவுப்படுத்த அமானா இக்தியார் திட்டத்தில் சேர்ந்து நன்மை அடைந்துள்ளதாகக் கூறினார். முதலில் தனது சேமிப்பின் மூலம் வியாபாரத்தை தொடங்கிய அவர், பின்னர் அதை விரிவுப்படுத்த அமானா இக்தியார் மூலம் RM3,000 நிதியுதவியை பெற்றுள்ளார்.
அமானா இக்தியார் சொந்த தொழில் தொடங்க விரும்புவோருக்கு பெரிதும் துணைப்புரிவதாக அவர் குறிப்பிட்டார். அதில் தற்போது இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு உதவுவதற்காக ``பெண்` எனும் திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த திட்டம் பெண் இந்திய தொழில்முனைவோர், வியாபார துறையில் சிறப்பாக செயல்பட பேருதவியாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. ஆகவே, இந்தியர்களுக்கு இப்படியோரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மடாணி அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாக சிலாங்கூர் அரசாங்கம் மாநில மக்களுக்கு பல திட்டங்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்துள்ளது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நம் அனைவரும் குறிப்பாக இந்தியர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என கேட்டு கொண்டார்.
அதுமட்டுமில்லாமல், வியாபாரத்தில் கால் பதிக்க நினைப்பவர்கள் முதலில் அதை பற்றிய அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். வியாபாரம் செய்ய நினைக்கும் தொழிலை பற்றியும் அதற்கான எதிர்காலத்தை பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு பல பட்டறைகளில் கலந்து கொள்ளலாம்.
பின், சிறிய அளவில் வியாபாரத்தை தொடங்கி மக்களின் வரவேற்பை கண்காணிக்க வேண்டும் மற்றும் அகல கால் வைப்பதை தவிக்க வேண்டும் என்றார். தொடக்கத்தில் பெரும் இலாபம் கிடைக்காவிட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து உழைக்க வேண்டும், காரணம் வியாபாரத்தில் உழைப்பே தாரக மந்திரம் என்று சொன்னார். அதுமட்டுமில்லாமல், காலத்திற்கேற்றவாறு வியாபார நுணுக்கங்களை மாற்றி அமைக்கவும் கற்று கொள்ள வேண்டும்.
இறுதியாக, நம் நாட்டில் இந்தியர்கள் பின்தங்கிய சமுதாயம் என்ற பிம்பத்தை உடைக்க எதிர்கால சந்ததினர் வியாபாரத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.


