ஷா ஆலம், ஜூலை 29 - நவீன மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களின் மையமாக சிலாங்கூர் விளங்குவதற்கு அம்மாநிலத்தின் கேந்திர முக்கியத்துவமிக்க வியூக இருப்பிடமே காரணமாகும்.
இம்மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் குற்றச் செயல்களின் மையங்களாகப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பகுதிகள் உள்ளதாக சிலாங்கூர் மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மாநிலத்திற்கு அதிகளவில் வருவதும் குற்றச் செயல்களின் விழுக்காடு அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளது என்று ஜூலை 21 முதல் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஹூசேன் தெரிவித்தார்.
சிறப்பான பொருளாதாரம், சமூகம், அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம் என்ற சிலாங்கூரின் நிலை மாநிலத்தை குற்றச் செயல்களுக்கான மையமாக மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடு புகுந்து திருடுதல் போன்ற வழக்கமான குற்றங்கள் குறைந்திருந்தாலும் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களும் திட்டமிடப்பட்ட வலையமைப்புகளும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
சிலாங்கூரில் மனித கடத்தல், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு போன்ற திட்டமிடபப்பட்ட குற்றங்களும் மிக அதிகமாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.


