ஜோகூர் பாரு, ஜூலை 29 - கடந்த சனிக்கிழமை பன்னிரெண்டு வயதுச் சிறுமிக்கு தலையில் இரத்தக் கசிவு ஏற்படும் அளவுக்கு கடுமையாகத் தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் உள்ளூர்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தலையில் காயத்துடன் காணப்பட்ட ஒரு சிறுமியைக் காட்டும் முகநூலில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளி காவல்துறையினரின் கவனத்திற்கு வந்தாக வட ஜோகூர் பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹிந்தர் சிங் கூறினார்.
அச்சிறுமியை 39 வயது நபர் ஒருவர் சுத்தியலால் தாக்கியதாக பொதுமக்களிடமிருந்து தமது தரப்புக்கு சனிக்கிழமை மாலை 5.19 மணியளவில் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
உங்கு துன் அமினா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சந்தேக நபர் அதே நாள் இரவு 7.25 மணிக்கு ஜோகூர் பாரு வட்டாரத்திலுள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டார் என அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட சிறுமி இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. ஆனால் அவரது தலையில் காயங்களும் வலது கையில் வீக்கமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் பல்வேறு குற்றப்பதிவுகளை கொண்டிருப்பது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் அவர் ஷாபு போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்தது.
சந்தேக நபர் ஜோகூர் பாரு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆகஸ்ட் 2 வரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
ஆயுதத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.


