கோலாலம்பூர், ஜூலை 29 - அரசாங்கம் இவ்வாண்டு டோல் கட்டண உயர்வை ஒத்தி வைக்காவிட்டால் 10 நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் முதல் பிரிவு வாகனமோட்டிகள்
டோல் சாவடிகளில் 83 சதவீதம் வரை அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வாகனமோட்டிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்திருக்கும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி இன்று மக்களவையில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
வசூலிக்கப்படும் டோல் கட்டணங்களுக்கும் பராமரிப்பு நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட 10 நெடுஞ்சாலைகளுக்கான சலுகை ஒப்பந்தங்களின் கீழ் முதல் பிரிவு வாகனங்களுக்கான டோல் கட்டண உயர்வின் அளவு 50 காசு முதல் வெ.4.56 வரை இருக்கும். இது 79 சதவீதம் முதல் 83 சதவீதம் வரையிலான அதிகரிப்பு என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை 23ஆம் தேதி அறிவித்தபடி 2025 ஆம் ஆண்டிற்கான கட்டண உயர்வை அரசாங்கம் ஒத்திவைக்காவிட்டால் நெடுஞ்சாலை பயனர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷ் முகமது புசி ஷ் அலி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
செராஸ்-காஜாங் விரைவுச்சாலை, கேஎல்-கோல சிலாங்கூர் விரைவுச்சாலை, புதிய வடகிள்ளான் நீரிணை புறவழிச்சாலை, செனாய்-டேசாரு விரைவுச்சாலை, கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 2, தென் கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை, சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா பாலம், டூத்தா-உலு கிளாங் விரைவுச்சாலை, கோலாலம்பூர்-புத்ரா ஜெயா விரைவுச்சாலை மற்றும் பட்டர்வொர்த் வெளிவட்ட சாலை ஆகியவையே அந்த பத்து சாலைகளாகும்.


