கோலாலம்பூர், ஜூலை 29 - வேப் மற்றும் மின் சிகரெட்டுகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டை முழுமையாக தடை செய்வது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகின்றது.
தற்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும், பொதுமக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் முழு ஆய்வு நடந்து வருகின்றது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய விதிமுறைகள் கடைகளில் வேப் மற்றும் மின் சிகரெட் பொருட்களின் விற்பனையை மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. ஆனால் மற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் அல்லது பல்பொருள் அங்காடிகளை உள்ளடக்குவதில்லை என்று சுல்கிஃப்லி கூறினார்.
மேலும், மின் சிகரெட்டுகள் அல்லது வேப்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மீதான முழுமையான தடை தொடரப்பட்டால், சட்டம், தொழில்துறை, அரசு வருவாய் மற்றும் உரிமம் வழங்கும் அம்சங்களை மதிப்பிடுவதற்கான ஆய்வுகளையும் குழு பரிந்துரைத்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட அணுகுமுறையைச் செம்மைப்படுத்த சுகாதார அமைச்சு தற்போது நீதித்துறை அலுவலகம் மற்றும் பல அமைச்சுகளுடன் கலந்தாலோசிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


