ஷா ஆலம், ஜூலை 29 - இம்மாதம் 24 ஆம் தேதி கிள்ளானில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைப் பிடிக்கும் முயற்சிகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அன்றிரவு 11.15 மணிக்கு பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக தென் கிள்ளான் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் கமலாரிபின் அமான் ஷா கூறினார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றத்திற்காக 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் 39வது பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ தென் கிள்ளான் மாவட்ட காவல் தலைமையகத்தை 03-3376 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னதாக, கிள்ளான், தாமான் செந்தோசா 19 வது பிரிவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


