கோலாலம்பூர், ஜூலை 29 - பூச்சோங், ஜாலான் ஜுருதேரா அருகே உள்ள கிள்ளான் ஆற்று பாலத்திற்கு அடியில் உள்ள ஒரு பாறையில் அடையாளம் தெரியாதப் பெண்ணின் உடல் குப்புறக் கிடக்க கண்டு பிடிக்கப்பட்டது.
அப்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து நேற்று காலை 11.58 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் குழு சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்படட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
கருப்பு நிற உடையுடன் காணப்பட்ட அப்பெண்ணின் அடையாள ஆவணங்கள் அல்லது தனிப்பட்ட உடைமைகள் எதுவும் காணப்படவில்லை.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தினர். மேலும், சூழ்நிலையின் அடிப்படையில் அப்பெண்ணின் உடல் சுமார் 24 மணி நேரம் ஆற்றில் இருந்ததிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்பெண்ணின் உடல் செர்டாங் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக வான் அஸ்லான் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அல்லது காணாமல் போனவரின் குடும்ப உறுப்பினர்கள் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் கே. விக்னேஸ்வரனை 014-922 9233 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


