அலோர் ஸ்டார், ஜூலை 29 - இந்த ஆண்டு தொடங்கி பயணிகள் பேருந்து உருமாற்றுத் திட்டத்தின் (எஸ்.பி.எஸ்.டி) கீழ் கட்டம் கட்டமாக அமல்படுத்தப்பட்டு வரும் BAS.MY சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மக்களுக்கு குறிப்பாக சம்பந்தப்பட்ட நகரங்களில் வசிப்பவர்களுக்கு உதவுவதற்காக, அச்சேவையை வழங்க அரசாங்கம் மிகப்பெரிய ஒதுக்கீட்டை வழங்கியுள்ளதை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.
"இதன் கட்டணம் மிகவும் மலிவானது. மக்கள் இதை பயன்படுத்தாவிட்டால், இந்தச் சேவையை மேம்படுத்த எங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்க நாங்கள் நிதி அமைச்சை எதிர்பார்க்க முடியாது," என்றார் அவர்.
கெடா, கோத்தா ஸ்டாரில் BAS.MY ஐத் தொடக்கி வைத்தப் பின்னர் அந்தோணி லோக் செய்தியாளர்களைச் சந்தித்து இவ்வாறு கூறினார்.
கோத்தா ஸ்டாரில், பேருந்துகளுக்கான 13 பாதைகளை பூர்த்திசெய்ய, அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு ஏழு கோடியே 85 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
BAS.MY கோத்தா ஸ்டாரில் கடந்த ஜூன் முதலாம் தேதி செயல்படத் தொடங்கியதில் இருந்து, சுமார் 30,000 பேர் இச்சேவையைப் பயன்படுத்தியுள்ளதோடு, அந்த எண்ணிக்கை இம்மாதம் கிட்டத்தட்ட 40,000-ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்னாமா


