ஷா ஆலம், ஜூலை 29 - தாய்லாந்து மற்றும் கம்போடியாவை அமைதிப்
பேச்சுக்கு இணங்கச் செய்ததன் வழி போரின் பேரழிவிலிருந்து ஆசியானை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளார்
என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மலேசியாவின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுகளில் கிடைத்த
பலன் ஆசியானுக்கு நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியதோடு வட்டார
நிலையிலும் அன்வாரின் தலைமைத்துவத்தை பரிமளிக்கச் செய்துள்ளது
என்று அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் வட்டாரத்தில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதில்
டத்தோஸ்ரீ அன்வார் காட்டிய ஆற்றல், நிதானம் மற்றும் தேச உணர்வு ஒரு
முன்மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆசியான் போர்க்களத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதை ஏற்க முடியாது
என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமிருடின்
குறிப்பிட்டார்.
முன்னதாக, கம்போடியா பிரதமர் ஹூன் மேனட் மற்றும் தாய்லாந்து
இடைக்காலப் பிரதமர் பும்தான் வெச்சாயாச்சாய் இடையே தலைநகரில்
நடைபெற்ற அமைதிப் பேச்சில் பிரதமர் அன்வார் மத்தியஸ்தராக
செயல்பட்டார்.
இந்த பேச்சுவார்த்தையின் பலனாக இரு நாடுகளுக்கும் இடையே
நிபந்தனை இல்லா போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு
வந்தது.
கம்போடியா-தாய்லாந்து எல்லையில் உள்ள 817 கிலோ மீட்டர் பகுதியில்
ஏற்பட்ட சர்ச்சை காரணமாக வெடித்த போர் ஆசியானில் களேபரத்தை
ஏற்படுத்தும் சூழலை ஆசியான் தலைவருமான பிரதமரின்
தலைமைத்துவம் வெற்றிகரமாக தடுத்துள்ளது என்று அவர் சொன்னார்.
ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஏற்பட்ட போர்களின் விளைவுகளை
நாம் கண்டுள்ளோம். மத்திய கிழக்கில் நிகழும் இனப்படுகொலைலையும்
நாம் பார்த்து வருகிறோம். உலக வல்லரசுகள் வாழ்வியல் மதிப்பை
புறக்கணித்து வரும் வேளையில் போர் தடுக்கப்பட வேண்டும், தடுக்க
முடியும் என்பதை ஆசியான் நிரூபித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


