NATIONAL

புக்கிட் கெமுனிங் பகுதியில் குப்பைகளை பொது இடங்களில் வீசுவோரை பிடிக்க உதவினால் வெ.1,000 வெகுமதி

28 ஜூலை 2025, 9:05 AM
புக்கிட் கெமுனிங் பகுதியில் குப்பைகளை பொது இடங்களில் வீசுவோரை பிடிக்க உதவினால் வெ.1,000 வெகுமதி

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜூலை 28 - கோத்தா கெமுனிங் தொகுதியிலுள்ள புக்கிட் கெமுனிங் வட்டாரத்தில் குப்பைகளை சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் வீசம் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தொகுதி சேவை மையம் மேற்கொண்டு வருகிறது.

அந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக குப்பைகளை கண்ட இடங்களில் வீசும் தனிநபர்கள் மற்றும் லோரிகளில் கொட்டும் தரப்பினரை கண்டறிந்து காணொளி, புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை வழங்குவோருக்கு தலா 1,000 வெள்ளியை அது வெகுமதியாக வழங்கவிருக்கிறது.

இந்த வெகுமதித் திட்டம் புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை அதாவது ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 14வது மண்டலத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு பிரத்தியேகமாக அமல்படுத்தப்பட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் அளிப்போருக்கு வெகுமதி அளிக்கும் இந்த திட்டம் இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன் கூறினார்.

சட்டவிரோதமாகக் குப்பைகளை வீசுவோரை சட்டத்தின் பிடியில் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைப்பதற்கு ஏதுவாக தேவையான ஆதாரங்களை வழங்குவோர் இந்த 1,000 வெள்ளி வெகுமதிக்கு தகுதியானர்கள் என்று அவர் தெரிவித்தார்.

இந்த வெகுமதி திட்ட அமலாக்க காலத்தில் குறைந்தது பத்து குற்றச் சம்பவங்களை தகுந்த ஆதாரங்களோடு பிடிக்க இயலும் எனத் தாங்கள் நம்புவதாகக் கூறிய அவர், இந்நோக்கத்திற்காக தொகுதி சேவை மையம் 10,000 வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்றார்.

அண்மைய சிலா வாரங்களாக புக்கிட் கெமுனிங் சாலையோரம் உள்பட பல்வேறு இடங்களில் குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொது மக்களின் சுகாதாரத்திற்கும் தொகுதியின் தோற்றத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்கு கண்காணிப்பு மேராக்களை பொருத்துவது, தன்னார்வலர்கள் மூலம் ரோந்துப் பணியை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்தோம். இருப்பினும் இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்காத நிலையில் இந்த சமூகப் பணியில் பொதுமக்களின் பங்கேற்பையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த வெகுமதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

பொது மக்கள் வழங்கும் முழுமையானத் தகவல்களைக் கொண்டு  இத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களின் லோரிகளைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்று உரிய தண்டனைப் பெற்றுத் தர முடியும். அதே சமயம் தங்கள் வட்டாரத்தில் சுத்தத்தை பராமரிப்பதில் பொதுமக்களின் பங்கேற்பை உறுதி  செய்யவும் குப்பைகளை சட்டவிரோதமாக கொட்டப்படும் சம்பவங்களைத் தடுக்கவும் முடியும் என யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

இந்த வெகுமதி திட்டம் தொடர்பான மேல் விபரங்களுக்கு 010-2118016 எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.