(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 28 - பூச்சோங், பண்டார் கின்ராரா 1, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு (தங்க கோயில்) சிலாங்கூர் மாநில அரசின் சார்பில் 15,000 வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்ட கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும் முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான இங் ஸீ ஹான் இந்த மானியத்தை ஆலயப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.
லீமாஸ் எனப்படும் பௌத்தம், கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமய அமைப்பின் சார்பில் இந்த மானியம் வழங்கப்பட்டது. ஆலய திருவிழாவில் கலந்து கொண்ட இங் ஸீ ஹானுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அவர், 15,000 வெள்ளி மானியத்திற்கான மாதிரி காசோலையை ஆலயப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
இதனிடையே, இந்த மானியம் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று ஆலயத் தலைவர் எம்.மணிமாறன் கூறினார்.
மாநில அரசின் வருடாந்திர மானியத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், மாநில அரசின் இந்த உதவியின் வாயிலாக ஆலயத்தில் சமய மற்றும் சமூகப் பணிகளை சீராக மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது என்றார்.
மாநில அரசின் இந்த மானியம் கிடைப்பதற்கு பேருதவியாக இருந்த இங் ஸீ ஹான் மற்றும் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டுவுக்கு ஆலயத்தின் சார்பாக தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக மணிமாறன் குறிப்பிட்டார்.


