ஷா ஆலம், ஜூலை 28 - கடந்த வாரம் ஆடவர் ஒருவரைக் கடத்திச் சென்று காயப்படுத்தியதாக இரண்டு சகோதரர்கள் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ரகசியமாகவும் தவறான முறையிலும் அடைத்து வைக்கும் நோக்கில் 21 வயது இளைஞரை
கூட்டாக கடத்தியதாக 19 வயதான வி. கீர்த்தி ராம் மற்றும் 18 வயதான வி. தேஷ்வின்ராம் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே ஒரு நபரை அடித்து காயப்படுத்தியதாக அவர்களுக்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு குற்றங்களும் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி மாலை 6.38 மணிக்கு இங்கு அருகிலுள்ள ஜாலான் பெர்சியாரான் பெர்மாய், புக்கிட் பூச்சோங் ஆகிய இடங்களில் புரியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 365வது பிரிவு மற்றும் அதிகபட்சமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது 2,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் அதே சட்டத்தின் 323வது பிரிவு கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 8,000 வெள்ளி ஜாமீன் வழங்க
துணை அரசு வழக்கறிஞர் நூருல் அகிலா ரோஸ்மி நீதிமன்றத்தை பரிந்துரைத்தார்.
எனினும் தனது கட்சிக்கார்கள் லோரி ஓட்டுநராகவும், பொருட்கள் விநியோகிப்பாளராகவும் பணி புரிவதால் அவர்களுக்கு குறைந்த ஜாமீன் தொகையை நிர்ணயிக்கும்படி அவர்களின் வழக்கறிஞர் நூர் பாராசிதா நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர்கள் பாட்டி மட்டும் இன்னும் பள்ளியில் படிக்கும் தம்பி தங்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றார். அவர்கள் காவல்துறையினரிடமும் சரணடைந்து அதிகாரிகளுக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் என்று வழக்கறிஞர் கூறினார்.
கீர்த்திக் ராம் மற்றும் தேஷ்வின்ராம் மீதான முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றம் முறையே 5,000 மற்றும் 2,000 வெள்ளி ஜாமீன் வழங்கியது. வழக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.


