கோலாலம்பூர், ஜூலை 28 - கடந்த வாரம் வியாழக்கிழமை
மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மூன்று ஆடவர்களைக்
கைது செய்ததன் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த
போதைப் பொருள் கடத்தல் கும்பலை முறியடித்த போலீசார், 46 லட்சத்து
60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 15.68 கிலோ மதிப்புள்ள ஷாபுவை
பறிமுதல் செய்தனர்.
ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் மாலை 5.40
மணியளவில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் 32 முதல் 61 வயது
வரையிலான இந்தோனேசிய ஆடவர் உள்பட மூவர் கைது
செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் இடைக்காலத் தலைவர் முகமது யுசுப்
ஜான் கூறினார்.
உள்நாட்டு ஆடவருக்குச் சொந்தமான கார் ஒன்றை சோதனையிட்ட
போலீசார் காரின் பொருள் வைக்குமிடத்தில் இருந்த துணை பை ஒன்றில்
10.34 கிலோ ஷாபு மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாக அவர்
தெரிவித்தார்.
கைதான ஆடவர் வழங்கிய தகவலின் பேரில் புஞ்சா ஜாலிலில் உள்ள
இரட்டை மாடி வரிசை வீட்டில் சோதனையிட்ட போலீசார் 122 பிளாஸ்டிக்
பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 135.34 கிலோ ஷாபுவை
பறிமுதல் செய்தனர் என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
இவ்விரு சோதனை நடவடிக்கைகளின் போது மொத்தம் 145.68 கிலோ
ஷாபு கைப்பற்றப்பட்டது. 728,000 போதைப் பித்தர்கள் பயன்படுத்தக்கூடிய
இந்த போதைப் பொருளின் மதிப்பு 46 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியாகும்
என்றார் அவர்.
கடந்த அக்டோபர் மாதம் வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த இரட்டை மாடி
வீட்டை அக்கும்பல் போதைப் பொருளை சேமித்து வைத்து பின்னர்
உள்நாடு மற்றும் இந்தோனேசிய சந்தைகளுக்கு அனுப்பும் மையமாகப்
பயன்படுத்தி வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


