ஷா ஆலம், ஜூலை 28: பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வைக்கும் கேபின்களை வாங்குவதற்கான செலவை ஈடுகட்ட கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து RM5,000 நன்கொடையை செக்ஷன் 6 தேசியப் பள்ளி பெற்றுள்ளது.
பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) மூலம் வழங்கப்படும் இந்த நிதி, பள்ளியின் சுமையைக் குறைப்பதோடு மாணவர்களின் பயன்பாட்டிற்கான விளையாட்டு உபகரணங்கள் முறையாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
"சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, ஜூலை 24 அன்று நன்கொடை அப்பள்ளிக்கு அனுப்பப்பட்டது.
"இது சற்று பழமையான பள்ளியாகும். எனவே பள்ளி விளையாட்டு உபகரணங்களை வைக்க போதுமான இடம் பள்ளியில் இல்லை. எனவே, கேபினை வாங்குவதற்கு நன்கொடை அளிக்கிறோம்," என்று அவர் முகநூலில் பகிர்ந்து கொண்டார்.
கல்வி நோக்கங்களுக்காகவோ அல்லது வசதி மேம்பாட்டிற்காகவோ உதவி தேவைப்பட்டால், மற்ற பள்ளிகளும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அவர் ஊக்குவித்தார்.
"தேவைக்கேற்ப விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும், மேலும் எங்களிடமிருந்து உதவி தேவைப்படும் பள்ளிகளுக்கு ஒதுக்கீடுகள் உள்ளன," என்று அவர் கூறினார்.


