கோத்தா பாரு, ஜூலை 28 - அரச மலேசிய சுங்கத் துறையின் (ஜே.கே.டி.எம்) கிளந்தான் மாநிலப் பிரிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ரந்தாவ் பஞ்சாங்கின் இரண்டு இடங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையில் ஒரு கோடி வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள 102.18 கிலோகிராம் கஞ்சா பூக்களை பறிமுதல் செய்தனர்.
காலை 10.30 மணிக்கு நடந்த முதல் சோதனையில் ரந்தாவ் பஞ்சாங் அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள் சுயேச்சை வர்த்தக மண்டலத்தின் முதலாவது நுழைவாயிலில் கைவிடப்பட்ட மூன்று பைகளைக் கைப்பற்றினர்.
அந்த பைகளில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 88 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளைக் கண்டுபிடித்ததாக மாநில ஜே.கே.டி.எம் இயக்குனர் வான் ஜமால் அப்துல் சலாம் வான் லாங் தெரிவித்தார்.
அதே சமயம், மோட்டார் சைக்கிளில் சென்றகொண்டிருந்த ஒரு பெண்ணை தடுத்து சோதனை செய்தபோது அவரிடம் 32 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் கஞ்சா பூக்களும் இருந்தன.
அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக அதே நாள் காலை 11 மணிக்கு ரந்தாவ் பஞ்சாங் விரைவு பேருந்து நிறுத்தத்தில் மற்றொரு சோதனை நடத்தப்பட்டது.
அங்கு கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் 60 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் அடங்கிய இரண்டு பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பறிமுதல் தொடர்பான விசாரணைக்கு உதவ ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நடவடிக்கைகளில் 100 கிலோவுக்கு மேல் எடையுள்ள 180 கஞ்சா பாக்கெட்டுகள் அடங்கிய ஆறு பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதன் மதிப்பு ஒரு கோடியே 10 லட்சம் வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் 30 முதல் 45 வயதுக்குட்பட்ட உள்நாட்டினராவர். இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


