சிப்பாங், ஜூலை 28 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்
(கே.எல்.ஐ.ஏ.) வழியாக சுமார் 73,000 வெள்ளி மதிப்புள்ள ஆறு அரிய வகை
உயிரினங்களை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு ஆடவர்
ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) மற்றும்
விமான பயணப் பாதுகாப்பு குழு இணைந்து நேற்று முன்தினம் இரவு 10.00
மணியளவில் நடத்திய சோதனையில் இந்தியாவுக்கு பயணம்
மேற்கொள்ளவிருந்த 38 வயதுடைய அந்த சந்தேக நபர் கைது
செய்யப்பட்டார்.
கிடைக்கப்பெற்றத் தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட
ஏ.கே.பி.எஸ். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பயணியின் பயணப் பெட்டியை
எக்ஸ்ரே சாதனத்தில் சோதனையிட்ட போது அதில் விலங்கினங்கள்
இருப்பது தெரிய வந்தது.
பின்னர் அந்த பயணப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் ஆறு
அரிய வகை விலங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று
அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
அழிந்து வருபவை என வகைப்படுத்தப்பட்ட அந்த உயிரினங்கள் உள்நாடு
மற்றும் அனைத்துலகச் சட்டங்களால் பாதுக்காக்கப்பட்டுள்ளன என்று அது
மேலும் குறிப்பிட்டது.
இந்த விலங்குகள் பிடிபட்டது தொடர்பில் 2010ஆம் ஆண்டு வனவிலங்கு
மறுவாழ்வு சட்டம் மற்றும் 2008ஆம் ஆண்டு அழிந்து வரும் வனவிலங்கு
மீதான அனைத்துலகச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு
வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


