ஜாகர்த்தா, ஜூலை 28 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று
தொடங்கி இரண்டு நாள் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டு
இந்தோனேசியா வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்திர
சந்திப்பின் ஒரு பகுதியாக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதிபர் பிராபோவோவுடன் அன்வார் நடத்தும் முதலாவது வருடாந்திர
சந்திப்பாகவும் இது அமைகிறது.
பிரதமரின் இந்த பயணத்தில் சரவா முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி
அபாங் ஓபேங், சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜ்ஜி நோர், வெளியுறவு
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும்
தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அஜிஸ்,
கல்வியமைச்சர் ஃபாட்டிலினா சீடேக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இந்த உயர்ந்த
பட்ச நிலையிலான ஒத்துழைப்பு செயல்முறையானது ஒரு வருடாந்திர
நிகழ்வாகும் என்றும் இது விவேக மற்றும் விரிவான ஒத்துழைப்பை
வலுப்படுத்துவதை நோக்கமாக க் கொண்டது என்றும்
இந்தோனேசியாவுக்கான மலேசிய அரச தந்திரி டத்தோ சைட் முகமது
ஹஸ்ரின் தெங்கு ஹூசேன் கூறினார்.
இந்த வருடாந்திர சந்திப்பு கடந்த 2006ஆம் ஆண்டு இந்த இரு
நாடுகளுக்கும் இடையே சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருவதாகக்
கூறிய அவர், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, உணவு உத்தரவாதம், கல்வி
உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான
வலுவான அரசியல் கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என அவர்
கூறினார்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும்
அனைத்துலக விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர்
என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டறிக்கை
வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.


