கோலாலம்பூர், ஜூலை 25 - தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே
அதிகரித்து வரும் எல்லை மோதலுக்கு பரஸ்பரம் ஏற்கத்தக்க தீர்வினை
ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆசியான் தலைவர் என்ற
முறையில் மலேசியா தயாராக உள்ளது.
உயிருடற் சேதம் ஏற்படும் அளவுக்கு தாய்லாந்து மற்றும் கம்போடியா
இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து மலேசியா ஆழ்ந்த கவலை
கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான்
கூறினார்.
இரு தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் அதேவேளையில்
பதற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்
என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்திற்கு இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்வினை கண்டறிவதற்கு
ஆசியான் தலைவர் என்ற முறையில் உதவிகளை வழங்க மலேசியா
தயாராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைவர் பொறுப்பை மலேசியா
தற்போது வகித்து வருகிறது. 1977, 1997, 2005 மற்றும் 2015ஆம் ஆண்டிற்குப்
பிறகு ஐந்தாவது முறையாக ஆசியான் தலைவர் பதவியை மலேசியா
ஏற்றுள்ளது.
ஆசியானில் புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ்,
மலேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம்
ஆகிய பத்து நாடுகள் உறுப்பியம் பெற்றுள்ளன.
தாய்லாந்து இடைக்காலப் பிரதமர் பும்தாம் வெச்சாயச்சாய் மற்றும்
கம்போடிய பிரதமர் ஹூன் மேனட் ஆகியோருடன் தொலைபேசி வழி
தொடர்பு கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நிலைமைமேலும் மோசமடைவதை தவிர்க்கும் வகையில் போர் நிறுத்த த்தை
விரைந்து அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
பகிரப்பட்ட எல்லைப் பகுதியில் தாய்லாந்து மற்றும் கம்போடியப் படைகள்
நேற்று தொடங்கி கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.


