கோலாலம்பூர், ஜூலை 25 - சுபாங் ஜெயா, ஜாலான் பெர்சியாரான் பூச்சோங் பெர்மாய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த கைகலப்பின் போது ஆடவர் ஒருவர் லோரியில் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதின்ம வயதுடைய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு 10 மணியளவில் உலு சிலாங்கூர் மற்றும் பூச்சோங்கில் 18 மற்றும் 19 வயதுடைய அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மூன்று பேருக்கும் எதிரான தடுப்புக்காவல் விண்ணப்பம் இன்று செய்யப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதே சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 32 வயதுடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்து நாளை வரை காவலில் வைத்துள்ளதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
கடன் பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக வான் அஸ்லான் கூறினார்.
சாலையின் நடுவில் நிறுத்தப்பட்ட ஒரு லோரியில் ஆடவர் ஒருவரை சில நபர்கள் வலுக்கட்டாயமாக ஏற்ற முயல்வதைச் சித்தரிக்கும் 15 வினாடி வீடியோ அண்மையில் வைரலானது.


