கோலாலம்பூர், ஜூலை 25 - இங்குள்ள செராஸ், 9வது மைல் அருகே குடியிருப்புப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பாலர் பள்ளி ஆசிரியையிடம் கொள்ளையிட முயன்றபோது பொதுமக்களால் தாக்கப்பட்ட வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு காலை 11.10 மணிக்கு பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
செராஸ் 9வது மைல் காவல் நிலைய உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் காயங்களுக்குள்ளாகி மயக்கமடைந்த நிலையில் ஒரு நபர் கிடப்பதைக் கண்டனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்டப் பரிசோதனையில் சந்தேக நபர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களால் தாக்கப்பட்டதால் அவர் மரணமடைந்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
உயிரிழந்த சந்தேக நபர் வெளிர் நிறமுள்ளவர். தோராயமாக 160 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர், கருப்பு டி-சர்ட் மற்றும் 'அடிடாஸ்' லோகோவுடன் கூடிய கருப்பு அரைக்கால் சிலுவார் அணிந்திருந்தார். அவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக 22 முதல் 72 வயதுக்குட்பட்ட எட்டு உள்ளூர் ஆடவர்களை போலீசார் சம்பவ தினத்தன்று இரவு 7.46 மணிக்கு கைது செய்தனர்.
அனைத்து நபர்களும் ஜூலை 28 வரை ஆறு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


