கோலாலம்பூர், ஜூலை 25 - முதலாம் படிவ மாணவியான சாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான காவல்துறை விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் இது குறித்து ஊகங்களை வெளியிட வேண்டாம் என்று அதன் அமைச்சர் ஃபாட்லினா சிடேக் அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தினார்.
நிபுணத்துவ முறையிலும் வெளிப்படையாகவும் விரிவாகவும் நேர்மையுடனும் தங்கள் கடமைகளைச் செய்ய காவல்துறைக்கு வாய்ப்பளியுங்கள். குற்றம் புரிந்த யாரும் பாதுகாக்கப்பட மாட்டார்கள். யாரும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப மாட்டார்கள் என்று அவர் முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
சபா மாநில கல்வித் துறை வாயிலாக கல்வி அமைச்சு விசாரணை செயல்முறைக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.மேலும் சம்பந்தப்பட்ட குடும்பங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் நலனை பாதுகாக்க தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது என்றார் அவர்.
மலேசிய சுகாதார அமைச்சுடன் இணைந்து உளவியல் ரீதியான ஆதரவு உட்பட உடனடி உதவி வழங்கப்படுகிறது.. அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள உங்களுக்கு பொறுமையும் மன உறுதியும் கிடைக்கட்டும் என்று அவர் கூறினார்.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி அதிகாலையில் சபாவின் பாப்பாரில் உள்ள ஒரு தங்குமிட கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து 13 வயது ஜாரா கைரினா விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.


