கோலாலம்பூர், ஜூலை 25 - ஆயுமேந்திய கொள்ளை மற்றும் வீடு புகுந்து
திருடும் கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும்
இரு அந்நிய நாட்டினர் செராஸ், ஜாலான் செரமா பாடியில் இன்று
அதிகாலை போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில்
கொல்லப்பட்டனர்.
அதிகாலை 3.45 மணியளவில் போலீசார் மேற்கொண்ட இந்த அதிரடி
நடவடிக்கையின் போது அவ்விரு கொள்ளையர்களும் தங்களின் அடுத்த
கொள்ளைக்கான இலக்கை தேடிக் கொண்டிருந்தது உளவு நடவடிக்கையின்
வழி தெரிய வந்தது என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை
இயக்குநர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் கூறினார்.
இச்சம்பவ நிகழ்ந்த போது, கடந்த 2023ஆம் ஆண்டு சுபாங்கில் களவு
போனதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை நிற ஹோண்டா சிட்டி காரில்
அவ்விருவரும் பயணித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் காரை மடக்க
முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
இத்தாக்குதலின் விளைவாக இரு கொள்ளையர்களும் சம்பவ
இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்ற அவர் சம்பவ இடத்தில்
செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
கொள்ளையர்களின் காரிலிருந்து வீட்டை உடைக்கப் பயன்படுத்தப்படும்
உபகரணங்கள், கணிசமான அளவு போதைப் பொருள், இரு
கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.
இவ்விருவரும் கடந்த 2022 முதல் 50க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய
கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதோடு போதைப் பொருள்
தொடர்பான குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட மொத்த
இழப்பு 30 லட்சம் வெள்ளியாகும் என அவர் தெரிவித்தார்.
இக்கும்பல் கோலாலம்பூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பகாங் மற்றும்
பேராக் ஆகிய மாநிலங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டி
வந்துள்ளதாக நம்பப்படுகிறது என்றார் அவர்.
இந்த கொள்ளைக் கும்பலில் மொத்தம் 15 உறுப்பினர்கள் இருப்பதாக
சந்தேகிக்கப்படுகிறது. எஞ்சிய குற்றவாளிகளைத் தேடும் நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.


