சிப்பாங், ஜூலை 25 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின்
(கே.எல்.ஐ.ஏ.) முதலாவது மற்றும் இரண்டாவது முனையங்களில் நேற்று
நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 198 அந்நிய நாட்டினர் கைது
செய்யப்பட்டனர்.
முறையான காரணமின்றி நாட்டிற்குள் நுழைய முயன்றது, போதுமான
அளவு பணம் கைவசம் இல்லாதது மற்றும் இந்நாட்டில் தங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்யாதது ஆகிய காரணங்களால் அவர்கள் தடுத்து
வைக்கப்பட்டதாக எல்லை கட்டுபாட்டு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின்
(ஏ.கே.பி.எஸ்.) தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது
ஜைன் கூறினார்.
இச்சோதனையில் ஒட்டுமொத்தமாக 200 அந்நிய நாட்டினர் தடுத்து
வைக்கப்பட்ட வேளையில் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு
திருப்பியனுப்பப்படுவர். ‘நோட் டு லேண்ட்‘ (என்.டி.எல்.) எனப்படும்
நடைமுறையைப் பயன்படுத்தி அவர்களை திருப்பி அனுப்பும் பணி
மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பிடிபட்ட வெளிநாட்டினரில் 128 பேர் விமான நிலையத்தின் முதலாவது
முனையத்திலும் 70 பேர் இரண்டாவது முனையத்திலும் கைது
செய்யப்பட்டனர் என்றார் அவர்.
முதலாவது முனையத்தில் 123 வங்காளதேசிகள், இரு பாகிஸ்தானியர்கள்,
இரு இந்தோனேசியர்கள் மற்றும் ஒரு சிரியா நாட்டவர் கைது
செய்யப்பட்ட வேளையில் இரண்டாவது முனையத்தில் 51
இந்தோனேசியர்கள், 13 இந்தியர்கள், நான்கு பாகிஸ்தானியர்கள் மற்றும்
இரு வியட்னாமியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் என்றார்.
சில பயணிகளின் கைபேசிகளை சோதனையிட்ட போது அதில்
ஏ.கே.பி.எஸ். அதிகாரிகள் சிலரின் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் சுஹைலி குறிப்பிட்டார். கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்கான ஓர் அடையாளமாக அந்த அதிகாரிகளின் படம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக அவர் சொன்னார்.


