கோலாலம்பூர், ஜூலை 25 - தாய்லாந்து- கம்போடியா எல்லையில் முற்றி
வரும் நெருக்கடியைத் தடுப்பதற்கு ஏதுவாக போர் நிறுத்தத்தைக்
கடைபிடிப்பதற்கு பேங்காக் மற்றும் நோம் பென் காட்டி வரும்
நேர்மறையான அறிகுறிகள் மற்றும் விருப்பத்தை பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்த
மலேசியாவின் கவலையை புலப்படுத்துவதற்காகக் கம்போடிய பிரதமர்
ஹுன் மேனட் மற்றும் தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தாம்
வேச்சாயாச்சாயுடன் தாம் நேற்று பேச்சு நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
இந்த உரையாடலின் போது மோதலைத் தடுப்பதற்கு ஏதுவாக போர்
நிறுத்தத்தை அமல் செய்யும்படி 2025 ஆசியான் தலைவர் என்ற
முறையில் இரு நாடுகளின் தலைவர்களையும் தாம் நேரடியாக கேட்டுக்
கொண்டதோடு அமைதிப் பேச்சு மற்றும் அரச தந்திர தீர்வுக்கான சூழலை
ஏற்படுத்தும்படி வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.
இந்த பரிந்துரையைக் கவனத்தில் கொள்வதற்கு பேங்காக் மற்றும் நோம்
பென் தலைவர்கள் காட்டிய விருப்பம் மற்றும் நேர்மறையான
அறிகுறிகளை நான் வரவேற்கிறேன்.
ஆசியான் உணர்வு மற்றும் பகிரப்பட்ட பொறுப்புணர்வின் அடிப்படையில்
இந்த அமைதிப் பேச்சுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் உதவ
மலேசியாதயாராக இருக்கிறது என்று அன்வார் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட எல்லைகளில் உள்ள
சர்ச்சைக்குரிய பகுதியில் தாய்லாந்து மற்றும் கம்போடிய துருப்புகளுக்கு
இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை எதிர்தரப்பே
தொடங்கியதாக இரு நாடுகளும் ஒன்றை மற்றொன்று குற்றஞ்சாட்டி
வருகின்றன.