ஈப்போ, ஜூலை 25 - கெடா மாநிலத்தின் கூலிம், பாகான் செனா
பகுதியிலுள்ள சட்டவிரோத தொழிற்சாலை ஒன்றின் மீது பொது தற்காப்பு
படையின் (பி.ஜி.ஏ.) வட பிராந்திய பட்டாளம் சுற்றுச்சூழல் துறையுன்
இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில் 2 கோடியே 10
லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு உபகரணங்களும் மின்னியல்
கழிவுகளும் கைப்பற்றப்பட்டன.
மின்னியல் கழிவுகளை சட்டவிரோதமான முறையில் பதனீடு செய்யும்
நடவடிக்கையில் அத்தொழிற்சாலை ஈடுபடுவது குறித்து கிடைத்த உளவுத்
தகவலின் அடிப்படையில் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஓப்
ஹஸாட் எனப்படும் இந்த அதிரடி சோதனை நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக உலு கிந்தா பி.ஜி.ஏ. வட பிராந்திய பட்டாளத்தின்
கட்டளை அதிகாரி எஸ்ஏசி ஷாரும் ஹஷி கூறினார்.
இச்சோதனையின் போது முறையான லைசென்ஸ் இன்றி செயல்பட்ட
அந்த தொழிற்சாலையில் கட்டிகளாக அழுத்தப்பட்ட மின்னியல் கழிகளும்
உலோகங்களைப் பதப்படும் உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்
குறிப்பிட்டார்.
கைப்பற்றபட்ட பொருள்களில் 50,000 கிலோ மின்னியல் கழிவுகள், 20,000
கிலோ அலுமினியம், 30,000 கிலோ கசடுகள் மற்றும் இரு போர்க்லிட்
சாதனங்களும் அடங்கும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இது தவிர இரண்டு புல்டோசர்கள், உலோகங்களை உருக்கும் இயந்திரம்,
மற்றும் ஒரு உலோகங்களை நசுக்கும் இயந்திரம் ஆகியவையும்
கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 12 லட்சத்து 50
ஆயிரம் வெள்ளி என மதிப்பிடப்படுகிறது என அவர் கூறினார்.
இந்த சோதனையின் போது 36 முதல் 45 வயது வரையிலான மூன்று சீன
நாட்டினர் மற்றும் இரு மியன்மார் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மியன்மார் நாட்டினர் செல்லத்தக்க பயண ஆவணங்களைக்
கொண்டிருக்கவில்லை என்றார் அவர்.


