புத்ராஜெயா, ஜூலை, 24- வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் அமல்படுத்தி வரும் திட்டங்களின் வாயிலாக எம்40 தரப்பினரும் பயன்பெறுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ரோன்95 பெட்ரோல் விலைக் குறைப்பு மற்றும் பத்து நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வு ஒத்தி வைப்பு ஆகிய நடவடிக்கைகள் நடுத்தர வருமானம் கொண்ட தரப்பினருக்கும் பயன் தரும் வகையில் உள்ளன என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.
நடுத்தர வருமானம் பெறும் எம்.40 தரப்பினரே டோல் கட்டண நெடுஞ்சாலைகளை அதிகம் பயன்படுத்துபவர்களாக உள்ளனர் என்று இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் பி40 தரப்பினர் மீது மட்டும் கவனம் செலுத்துகிறோம் என்று எம்40 தரப்பினர் கூறுகின்றனர். உண்மை என்னவென்றால், பரம ஏழைகளிடம் தொடங்கிய எங்கள் உதவியை பி40 தரப்பினருக்கு விரிவுபடுத்தினோம். இப்போது எம்.40 தரப்பினருக்கு அதனை கொண்டுச் சென்றுள்ளோம். இதுதான் எங்களின் தீர்வு என அவர் சொன்னார்.
ஆகவேதான், அமலாக்கம் மீது பொறுமை காக்கும்படி நாங்கள் கூறி வந்தோம். குறைந்த பட்சம், ரோன்95 பெட்ரோல் விலைக்குறைப்பு எம்40 மற்றும் அதற்கும் மேற்பட்ட தரப்பினருக்கு நிலையான பலனைக் கொண்டு வரும் என அவர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள பத்து நெடுஞ்சாலைகளில் டோல் கட்டண உயர்வை அரசாங்கம் ஒத்தி வைப்பதாக பிரதமர் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக நேற்று மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.
மேலும், பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானிய சீரமைப்பின் வாயிலாக ரோன்95 பெட்ரோல் விலை வெ.2.05 லிருந்து வெ.1.99 ஆக குறைக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.


