(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 24- மாணவர்களுக்கான தேசிய சதுரங்கப் போட்டி 2025 ஷா ஆலம், செக்சன் 7, மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் வரும் ஜூலை 26ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி நடைபெறவுள்ளது.
தமிழ் தொடக்கப் பள்ளி மாணவர்கள் மற்றும் இடை நிலைப்பள்ளிகளில் பயிலும் முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்படும் இந்த போட்டியில் மொத்தம் 12 பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிக்கொணர்வதற்கு வாய்ப்பு வழங்குகிறது.
“மூளை இயக்கத்தை ஊக்குவிக்கும் சிந்தனைத் திறன்“ எனும் கருப்பொருளிலான இந்த சதுரங்கப் போட்டியை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளதாக பள்ளி வாரியத் தலைவர் கா.உதயசூரியன் கூறினார்.
மாணவர்கள் மத்தியில் சிந்தனைத் திறன், ஒழுக்கம், மற்றும் விடாமுயற்சியை மேம்படுத்தக்கூடிய இப்போட்டியில் நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சதுரங்கம் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது ஒரு கல்வி முறை. நம் மாணவர்களின் சிந்தனைத் திறனையும் நிதானமாக முடிவெடுக்கும் பக்குவத்தையும் வளர்க்கும் ஆற்றல்மிக்க கருவி என அவர் குறிப்பிட்டார்.


